இன்று(01.09.2022) பிள்ளையார் சுழி இட்டு, இந்த வலைப்பதிவை தொடங்குகிறேன்.
பிள்ளையார் சுழி இட்டு தொடங்குவதால், பிள்ளையார் சுழி பற்றியே பேசி தொடங்குவோம் எனத் தோன்றியது. ..நேற்று, பிள்ளையார் சதுர்த்தி வேறு ஆகையால் பிள்ளையாருக்கே இந்த முதல் பதிவையும் அர்பணிக்கலாம் எனவும் தோன்றியது…
அதனால் இதோ …
எதைத் தொடங்கும் முன்னரும் பிள்ளையாரை வணங்கிவிட்டு தொடங்குவது மரபு. எழுதும்போது கூட பிள்ளையார் சுழி இட்டு விட்டு எழுதுவது தொன்று தொட்டு வரும் பழக்கம். நான் பள்ளி பயிலும் காலத்தில் எல்லாம், விடைத் தாளின் மேலே விநாயகர் சுழி இட்டு, பக்கத்தில் கிருஸ்துவின் க்ராஸ் சின்னமும், இஸ்லாமிய பிறை சந்திர சின்னமும் வரைந்து, அனைத்து கடவுள்களையும் வேண்டிய பின்னர் விடை எழுத தொடங்கியது , இன்று யோசித்தால் இதழ்களில் புன்சிரிப்பு பூக்கின்றது …
சரி, விஷயத்திற்க்கு வருவோம்…
ஏன் இவ்வாறு அனைத்திற்கும் முதல் விநாயகரை வேண்டுகிறோம் ? என்றால், விடை உங்களுக்கு தெரிந்ததே. விக்கினங்களை போக்கும் விக்கின விநாயகனை வணங்கினால் அனைத்து தடைகலும் தவிடுப் பொடி ஆகிவிடும் என்பது. விநாயகருக்கு அப்படிப்பட்ட அருளை சிவனும் பார்வதிதேவியும் அருளி உள்ளனர்.
ஆனால் , தடைகளைத் தகர்க்கும் ஏக்க தந்தனுக்கு தடை ஏதும் வந்ததில்லையா என யோசித்தால் , தடைகள் வந்திருக்கின்றன என்றே எனக்கு தோன்றுகின்றது.
மஹாபாரத காவியத்தை வேதவ்யாஸர் கூறக் கூற எழுதி தந்தவர், நமது பிள்ளையார். அவ்வாறு எழுதிக் கொண்டிருக்கும் போதே, அவரது எழுதுகோல் உடைந்து , எழுத தடை ஏற்பட்டதே.
ஞான பழத்திற்கான போட்டியில், தம்பி முருகனிடம் விண்ணில் விரைந்து பறக்கும் மயில் வாகனம் இருக்கும்போது, தன்னிடம் மூஞ்சுறு எலி வாகனம் தானே இருந்தது. என்ன தான் விரைந்து ஓட்டினாலும் மயில் அளவுக்கு எலி விரைந்து செல்ல இயலுமா? சொல்லவே தேவை இல்லை, அழகாக கொழுக் மொழுக் என இருக்கின்ற பிள்ளையாரை சின்ன எலி சுமந்து விரைவாக செல்வதென்றால் லேசான செயலா?
ஆனால் உங்களுக்கே தெரியும், விநாயகரே மஹாபாரத காவியத்தை எழுதித் தந்தார். முருகனுக்கு முன்னே முவ்வுலகையும் சுற்றி, ஞான பழத்தையும் வென்றார்.
காரணம், தடைக்கற்களைப் படி கற்களாக்கும் அவரது அறிவுக் கூர்மையே. ஞானப் பழத்தை ஈட்டி தந்தது அவரது ஞானமே.
எழுதுதுகோல் உடைந்தால் என்ன? என் தந்தத்தையே எழுதுகோல் ஆக்குவேன். உலகை சுற்ற வேண்டுமா? அம்மையப்பனே என் உலகம் அவர்களையே சுற்றி வருவேன், என தன் ஞானத்தால் தனக்கு நேர்ந்த தடைகளையே தனக்கு சாதகம் ஆக்கிக்கொண்டார் பிள்ளையார்.
பிள்ளையார் பிறக்கும்போதே, பேரிடியாக அவரின் தலை துண்டிக்கப்பட்டது. ஆனால் கஜாசுரனின் வேண்டுதளுக்கு ஏற்ப அவனது தலை விநாயகருக்குப் பொருத்தப்பட்டது. நாமும் நமக்கு துன்பம் நேரும் காலங்களில், இதுவும் கடந்துபோகும் என உணர்ந்து கடவுளின் மீது நம்பிக்கை வைத்து நல்ல காலத்தை எதிர்நோக்கி இருக்கவேண்டும் என்பதை இக்கதை உணர்த்துகின்றது.
பிள்ளையார் நமது தடைகளை தகர்ப்பதோடு, நாம் எவ்வாறு தடைகளை
முன்னேற்றப் படிகள் ஆக்கவேண்டும் என்பதற்கும், தானே முன்னுதாரணமாக திகழ்கிறார்.
தடைகள் அல்லாத வாழ்க்கை இல்லை, அதற்கு விநாயகனே சான்று. ஆனால் அந்த தடைகளை நம் அறிவால் வெல்லலாம் என்பதற்கும் அவனே சான்று.
பிள்ளையார் சுழி சொல்லாமல் சொல்வதும், அதன் தாத்பரியமும் இதுவே என தோன்றுகிறது.
விநாயகனை வழிபட்டு, நல்வழிப்படுவோம். அவன் அருளுடனும், அவன் அருளும் ஞானத்துடனும்
வாழ்க்கையில் ஏற்படும் தடைகளுக்கு புதிய கோணங்களில் சிந்தித்து விடைகளை கண்டுப்பிடித்து முன்னேறுவோம்.